காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூபாய் 700 கோடி ஒதுக்கீடு... விவசாயிகள் கொண்டாட்டம்..

0 1244

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு 3,099 கோடி ரூபாயும், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்திற்காக 3700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு 500 கோடியும், மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் சாரபங்கா நீரேற்றுப் பாசன திட்டத்திற்கு 350 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்துக்காக 300 கோடி ரூபாயும், வரும் நிதி ஆண்டில் கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு 300 கோடி மற்றும் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய குளங்களை உருவாக்குதல் மற்றும் பாசன வாய்க்கால்களை அமைக்க 655 கோடியும், செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் வடிகால்கள் சீரமைக்க 5,439 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல், முதனிலை பணிகளுக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், அங்கு விவசாயிகள் தாரை தப்பட்டை, மேளதாளத்துடன் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு 253.14 கோடி ரூபாயும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தை செயல்படுத்த 959 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மாநில குடும்பத் தரவு திட்டத்தை செயல்படுத்த 47.50 கோடி மற்றும் சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்ருத் திட்டத்தை செயல்படுத்த 1450 கோடி ரூபாயும், நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற 406 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை-கன்னியாகுமரி தொழில்வழித் தட திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் முதல் உப்பிலிபாளையம் வரையில் உள்ள அவினாசி சாலை நெடுகிலும் 10.1 கி.மீ. தூரத்திற்கு உயர்த்தப்பட்ட சாலைகள் திட்டத்தை செயல்படுத்த 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 3100 கோடியும், பாரத் ஸ்டேஜ் - 6 தரம் கொண்ட 2,213 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான திட்டத்துக்கு 960 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

படிப்புக்கு தேவையான பொருட்களை விலையின்றி வழங்கும் திட்டத்திற்கு 1,018.39 கோடியும், 11ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு 966.46 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 10ஆவது பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படித்திருப்பதாகவும், இது யாருக்கும் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருப்பதாகவும் விமர்சித்தார்.

சென்னை சுற்றுவட்ட சாலை திட்டம் 12,301 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும், முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான பகுதிக்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க 12.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை, மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீள மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 60 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையை 634 கோடி ரூபாய் செலவில் சிப்காட் நிறுவும் எனவும், நிர்பயா நிதியத்தின் மூலம் 75.02 கோடி ரூபாய் செலவில் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர் பகுதியில் 1.41 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும், சென்னை நகரின் பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக பொருத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முகமூடி, 3 அடுக்க முகமூடிகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளது என்றும், கோவில்களுக்கு சொந்தமான 7233 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments