ஆடலுடன் பாடல் கணவனை பறித்த டிக்டாக் அழகி..! வீதியில் தவிக்கும் மனைவி

0 837

சேலம் அருகே டிக்டாக்கில் டூயட் பாடலுக்கு ஜோடியாக வீடியோ பதிவிட்ட பெண்ணுக்காக இளைஞர் ஒருவர், தாலி கட்டிய மனைவியை வீதியில் தவிக்க விட்டு சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. டிக்டாக்கால் வீதிக்கு வந்த விதவைப் பெண்ணின் வாழ்க்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஓட்டுனரான முரளிதரன் என்பவர் தான் இந்த விவகார ஆண்குயில்..!

பிரபஞ்ச அழகி போல முகபாவனையிலேயே காதலை கொட்டிய திருச்சியை சேர்ந்த டிக்டாக் பெண் குயிலை, தனது காதல் பார்வையால் வீழ்த்தினார் முரளி..!

ஆரம்பத்தில் நாட்டிய திறமையை மட்டுமே தனியாக டிக்டாக்கில் காட்டிய இந்த பெண் குயில், ஒரு கட்டத்தில் முரளியுடன் டூயட்பாடலுக்கு வீடியோ பதிவிடும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

திருட்டு காதல் தூதுவன் டிக்டாக் மூலம் செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட இருவரும் நேரில் சந்தித்து, காதலில் விழுந்து... மோட்டார் சைக்கிளில் பறந்து.... பேருந்தில் புகுந்து... என்று டிக்டாக் செய்தபடியே சுற்றி வந்துள்ளனர்.

டிக்டாக்கிற்கு அடிமையாகி அரைமயக்கத்தில் சுற்றி திறிந்த இந்த திருட்டு ஜோடி செய்ததில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் மறு மணம் செய்து கொண்ட ஒரு விதவை பெண்ணை கடனாளியாக வீதியில் தவிக்க விட்டது தான்..!

தற்போது காதலியுடன் வலம் வரும் முரளிதரனின் 2 வது மனைவிதான் அந்த பெண்..! முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வாழ்ந்த, லாரி ஓட்டுனரான முரளிதரனுக்கும், விதவை பெண் ஒருவருக்கும் குடும்பத்தினர் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது.

லாரி லோடுக்கு செல்வதாக கூறிவிட்டு மலர் விட்டு மலர் தாண்டும் திருட்டு வண்டு போல வலம் வந்த முரளிதரனின் காதல் லீலைகளை, டிக்டாக் வீடியோ மூலம் கண்டு சத்தம் போட்ட போது, நடிப்பு திறமை என கூறி சமாளித்த முரளி, மனைவியை இனி சந்தேகபட மாட்டேன் என்று கையில் சூடம் ஏற்றி கையை சுட்டுக் கொள்ளும் அளவிற்கு நாடகமாடியுள்ளார்.

ஒரு கட்டத்தில் திருச்சியை சேர்ந்த தனது டிக்டாக் காதலிக்கு நாமக்கல் அருகே தனி வீடு எடுத்து குடித்தனம் வைத்து திருட்டு காதலுக்கு மரியாதை செய்த முரளியின் சின்னவீடு சமாச்சாரம் டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டதால் வெளிச்சத்திற்கு வந்தது.

மீண்டும் தட்டிக்கேட்ட மனைவியை அப்படியே தவிக்கவிட்டு முரளி சென்றுவிட்டதால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமலும், அன்றாட செலவுக்கு கூட வழியில்லாமலும் தவிப்பதாக கண்ணீர் வடிக்கின்றார் முரளியின் மனைவி.

தனது வாழ்க்கையை கெடுத்து வீதிக்கு கொண்டு வர மூல காரணமான டிக்டாக்கை தடை செய்யவும் , தனது கணவரை காதலியிடம் இருந்து மீட்டு கொண்டு வரவும் போலீசில் புகார் அளித்துள்ளார் இந்த அபலை பெண்..!

சமூகத்தை சீரழிக்கும் பார்த்தீனிய செடி போன்ற டிக்டாக் செயலியை தடை செய்யாவிடில் பலரது வாழ்வு வறண்ட பாலைவனமாகிவிடும் என்பதற்கு தொடரும் இது போன்ற குற்ற சம்பவங்களே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments