சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

0 388

ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக மேலும் 44 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பீதி காரணமாக சீனாவுக்கு சென்று திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் ((Diamond Princess)) சொகுசு கப்பலில் இருக்கும் சுமார் 3700 பேரை ஜப்பான் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. யோகோஹமா பகுதியில் கடந்த 4ம் தேதி முதல் அந்த கப்பல் நிறுத்தப்பட்டு, அதில் இருப்போர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பரிசோதனையில் மேலும் 44 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சர் கட்சுநுபு கடோ தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 219ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்ட 44 பேரும் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவலை ஜப்பான் அமைச்சர் வெளியிடவில்லை. வைரஸ் பாதிக்கப்பட்டோர் விரும்பினால், கப்பலுக்கு வெளியே அழைத்து செல்லப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று மட்டும் அவர் அறிவித்துள்ளார்.

கப்பலில் 3,700 பேர் உள்ள நிலையில், அவர்களில் அதிக அளவு கட்டணம் செலுத்தி பயணிக்கும் சர்வதேச பயணிகளின் நலன் குறித்து மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவதாகவும், மாலுமிகள் சுமார் 1000 பேர் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கமான பணியை செய்து கொண்டு, வைரஸ் பாதிப்பு நபர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வைரஸ் பாதிப்பு பயணிகளுக்கு உதவும் பணியில் ஈடுபடுவதால் தங்களுக்கும் அது பரவும் ஆபத்து இருப்பதாக மும்பையை சேர்ந்த பெண் மாலுமி சோனாலி தாக்கர் அச்சம் தெரிவித்துள்ளார். தனக்கும், இன்னொரு பெண் மாலுமியும் காய்ச்சல் இருமல் சளி உள்ளிட்டவற்றால் 2 நாள்களாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது தனிமை அறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவிக்கும் 6 தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் மீட்டு நாட்டுக்கு அழைத்து வர வேண்டுமென்று மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுக்கு ட்விட்டர் மூலம் அவர் கோரிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் கடலில் நிறுத்தப்பட்ட டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் தமிழகத்தை சேர்ந்த  6 பேர் தவித்து வருவதாக கூறியுள்ளார். 6 பேரையும் கப்பல் நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது என்றபோதிலும், அவர்களையும் அக்கப்பலில் உள்ள பிற இந்தியர்களையும் மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதனிடையே கொரோனா வைரஸ் பரவிவரும் ஜப்பான் கப்பலில் தவித்துவரும் மதுரையை சேர்ந்த அன்பழகன் என்ற பயணியின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம்  இன்று கோரிக்கை மனு அளித்தார். கப்பலில் இருக்கும் இந்தியர்கள் 100 பேர் நோய் தொற்று அச்சத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சோதனை நடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தமது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments