விவசாயிகளை காத்திட... பூச்சிக்கொல்லி மேலாண் மசோதா

0 490

விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், பூச்சிக்கொல்லி மருந்து மேலாண்மை மசோதாவுக்கு, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு, மூலதனமாக 2,500 கோடி ரூபாயை விடுவிக்கவும், கேபினட் ஒப்புதல் தந்திருக்கிறது. 

தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கேபினட் கூட்ட முடிவுகளை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

அப்போது, நேஷனல் ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் மூலதனத்துக்காக 2,500 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.

பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா, 2020-ஐ நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின், 2ஆவது அமர்வில், அறிமுகப்படுத்தி, தாக்கல் செய்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதுகாப்பான மற்றும் தரமான பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதற்காகவும், விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும் அடிப்படையாக கொண்டு, இந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா கொண்டுவரப்படவுள்ளது.

மேலும், இந்தியா மற்றும் ஐஸ்லாந்து இடையே, நீடித்த மீன்வள மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், பிரதமர் தலைமையிலான கேபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், கடலோரம் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த மீன் வளத்தை மதிப்பிடுதல் பணிகளில் ஈடுபடுதல், நவீன மீன்பிடித்த மேலாண்மையை பகிர்ந்து கொள்ளுதல், ஆழ்கடல் மீன்பிடித்தல் மூலம் கிடைக்கும் மீன்களைப் பதப்படுத்தி சந்தைப்படுத்துதல் ஆகியனவற்றிற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கும், வருவாய் மீதான வரிகளோடு தொடர்புடைய வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்தியா-இலங்கை இடையே திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments