தலைநகரில் 3-வது முறை.. ஆம் ஆத்மி ஆட்சி..!

0 866

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது. ஒற்றை இலக்கத்தில் தாமரை மலர்ந்திருந்தாலும், இரண்டாவது முறையாக, கை ஒடிந்த காங்கிரஸ், ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. 

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல், பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

தொடக்க முதலே, பெரும்பான்மை பலத்துக்கு தேவையானதை விட, ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றது. பகற்பொழுது வரை, இரட்டை இலக்கத்தில் முன்னிலை பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, பிற்பகலில் ஒற்றை இலக்கத்திற்கு மாறியது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆம் ஆம்தி கட்சி 63 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படியே, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, டெல்லி பெண்கள் மத்தியில் திடீர் பிரபலமான வேட்பாளர் ராகவ் சாத்தா ((Raghav Chadha)) உள்ளிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வாகை சூடினர்.

 

கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், தேர்தல் முடிவு, புதிய அரசியலின், புதிய தொடக்கம் என்றும், இது நல்லதொரு புதிய சகுனம் என்றும் தெரிவித்தார். வெகுஜனத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது என்ற அயராத பணிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறிய கெஜ்ரிவால், உற்சாக மிகுதியில், டெல்லி மக்களை நேசிப்பதாக கூறினார்.

 

காந்தியவாதி அண்ணா ஹசாரேவின், ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தை அரசியல் இயக்கமாக வார்த்தெடுத்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2012ல் ஆம் ஆத்மி என்ற பெயரில் கட்சித் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், ஒரே ஆண்டில், ஆட்சியைப் பிடித்தார். இருப்பினும், ஒன்றரை மாதத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கியதால், குடியரசு தலைவர் ஆட்சி அமலானது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, 67 இடங்களில் வென்று 2ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். தற்போது, மீண்டும், அதே அளவு இடங்களை தனதாக்கி, 3ஆவது முறையாக, ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments