திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட வந்த அமைச்சர் மு.பெ.சாமி நாதனை முற்றுகையிட்ட திமுகவினர் சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது.
திருப்பூர் பாரதி நகரில் தமிழ் நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பார்வையிட அமைச்சர் வெள்ளகோவில் சாமி நாதன் சென்றார். அவருடன் மேயர் தினேஷ்குமாரும் உடன் சென்றிருந்தார். அப்போது அப்பகுதி திமுகவினர் அமைச்சரை முற்றுகையிட்டனர்.
அமைச்சர் வருகை குறித்து தங்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்காதது ஏன் என்று உரிமையுடன் கோபித்துக் கொண்ட பழைய கட்சிக்காரர் ஒருவர் 40 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன் ஒரு தகவல் சொல்லவில்லையே என்று ஆவேசமானார்
வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக கோபித்துக் கொண்ட அந்த மூத்த உடன்பிறப்பை மேயர் தினேஷ்குமார் சமாதானப்படுத்தினார்.
அமைச்சர் நிகழ்ச்சியில் தொண்டர் ஆவேசமான சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.