சென்னையில் பெற்றதாயை தவிக்கவிட்டு திருவள்ளூர் அருகே பண்ணை வீட்டில் மறைந்து வாழ்ந்த பணக்கார மகனை நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் கைது செய்தனர்...
வித விதமாக மேஜிக் செய்து மக்களை கவர்ந்தாலும், தனது தாயை கவனிக்கத் தவறி வீட்டை விற்றுவிட்டு ஓடி போலீசாரிடம் சிக்கிய மேஜிக் மேன் திலீப் ராஜூ இவர் தான்..!
கர்நாடக மாநிலம் மங்களூரை பூர்வீகமாக கொண்டவர் ஜார்ஜ் ராஜூ இவரது மனைவி சோனா. இவர்களுக்கு திலீப்ராஜூ என்ற மகன் உள்ளார். சோனாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமான நிலையில் 80 வயது மூதாட்டியான சோனாவை கவனிக்க மறுத்த மேஜிக் மேனான திலீப் ராஜூ, தாயை மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் விட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது.
சோனா பெயரில் முகப்பேரில் மகிழ்ச்சி அப்பார்ட் மெண்டில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை எழுதிவாங்கிக் கொண்டு திலீப் ராஜூ உதவி செய்ய மறுப்பதாகவும் தனக்கு உதவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் கூறி சோனா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திலீப் ராஜூ மாதம் 20 ஆயிரம் ரூபாய் தாய்க்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருந்தும் திலீப் ராஜூ தாய்க்கு உதவித்தொகை வழங்காமல் மகிழ்ச்சி அப்பார்ட்மெண்டில் இருந்த வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் திலீப்பை தீவிரமாக தேடிய போலீசார், திலீப்ராஜூவை செவ்வாய்பேட்டை அருகே பண்ணை தோட்டத்தில் வைத்து கைது செய்தனர்.போலீசார் கைது செய்ய வந்த போது திலீப் திருடன் திருடன் என கத்தியதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரே ஒரு போலீஸ் அவரை கைது செய்ய வந்துள்ளீர்களா ? என்றும் கேள்வி எழுப்பினர். திலீப்ராஜின் மனைவி ஆய்வாளர் ஷோபா தேவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆய்வாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் திலீப் ராஜாவை கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தாய் சோனாவுக்கு கடந்த 2018 முதல் 2021 வரை சுமார் 6 லட்சம் ரூபாய் வரை ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதும்,
தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறி அக்கம்பக்கத்தினரை ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து வாக்கி டாக்கியை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை தாக்கிய குற்றத்திற்காக மஞ்சு கீதாவும் கைது செய்யப்பட்டார்
நீதிமன்றம் உத்தரவிட்டும் பெற்ற தாய்க்கு ஜீவனாம்சம் கொடுக்க மனமில்லாமல் சொந்த வீட்டை விற்றுவிட்டு மகன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த சம்பவம் பெற்றோர்களை கலங்க வைத்துள்ளது.