செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 20-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
ஜாமீன் மனு தொடர்பான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமோ சாட்சிகளோ இல்லை என்றும் பா.ஜ.க.வின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அமலாக்கத்துறை விசாரணையின் போது பா.ஜ.க.வில் சேருமாறு செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி தரப்பட்டிருக்கவும் கூட வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் என்று அமலாக்கத்துறை கூறும் மின்னணு ஆதாரங்கள் திருத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட கபில் சிபல், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் இருந்த 284 பைல்களில் 222 பைல்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் புதிதாக 441 பைல்கள் குறிப்பிட்ட சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி 1 கோடியே 34 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், அவரது வருமான வரி கணக்கை பார்த்தாலே உண்மை தெரியும் என்றும் கபில் சிபல் கூறினார்.
அதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வங்கி பரிவர்த்தனை மூலமாக லஞ்சம் பெறப்பட்டு இருந்தால் மட்டுமே வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய முடியும் என்று குறிப்பிட்டார். செந்தில் பாலாஜி ரொக்கமாக கூட பெற்றிருக்கலாம் என்று தெரிவித்த அவர், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி முடித்தாலும் கூட சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என்றார்.