சென்னை எண்ணூரைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து 'லாங் டிரைவ்' போகலாம் என்று ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று அத்துமீறிவிட்டு , பெண் மருத்துவரை திருமணம் செய்துகொண்ட இளம் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்
சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள இந்திராஸ் லைஃப் கேர் கிளினிக்கில் மருத்துவராக உள்ள சபரி மோகன் என்பவர் தான் இளம்பெண் ஒருவருக்கு லைப் தருவதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய புகாரில் சிக்கி போலீசாரால் தேடப்படுபவர்..!
5 வருடங்களுக்கு முன்பாக தன்னிடம் சிகிச்சைக்கு வந்த எண்ணூரைச் சேர்ந்த இளம்பெண்ணை வாட்ஸ் அப் சாட்டிங் மூலம் மயக்கி காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகி வந்த சபரி மோகன் , இரவு பகல் பாராமல் அந்தபெண்ணுடன் வீடியோகாலில் காதல் மொழி பேசியதாக கூறப்படுகின்றது.
டாக்டர் சபரி மோகன் வாட்ஸ் அப்பில் ஆபாச குறுந்தகவல் மற்றும் வீடியோக்களை அனுப்பி மனதளவிலும், உடல் அளவிலும் ஆசையை தூண்டி தன்னை லாங் டிரைவ் போகலாம் என்று ஏமாற்றி அழைத்துச்சென்று மதுரவாயலில் உள்ள நண்பரின் அறையில் வைத்து தன்னை சீரழித்து விட்டதாகவும் , அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி மீண்டும் மீண்டும் தன்னை வலுக்கட்டாயமாக மிரட்டி வரவழைத்து அத்துமீறியதாகவும் அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தையும் அந்த இளம்பெண் வெளியிட்டுள்ளார்.
வக்கிரமான வாட்ஸ் அப் சாட்டிங், வில்லங்கமான வீடியோ கால், விவகாரமான லாங் டிரைவ் என்று வாழ்க்கையில் விளையாடிய சபரி மோகன் , தன்னை ஏமாற்றி விட்டு பெண் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முயல்வதாக அந்தப்பெண் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அந்த பெண்ணை அலைக்கழித்ததை பயன்படுத்திய சபரி மோகன் , பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே அந்தப் பெண்ணிடம் பல்வேறு ஆதாரங்கள் இருந்ததால் வேறு வழியின்றி மருத்துவர் சபரி மோகன் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல் , தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்த புகார் குறித்து தலைமறைவாக உள்ள மருத்துவர் சபரி மோகனின் தாய் கூறும் போது, தனது மகன் மட்டும் தப்பு செய்யவில்லை என்றும் அந்த பெண்ணும் சேர்ந்து தான் தப்பு செஞ்சிருக்கு, தனது மகனை கஷ்டபட்டு மருத்துவம் படிக்க வைத்ததாகவும், அந்த பொண்ண எங்க பையனுக்கு எப்படி கல்யாணம் கட்டி வைக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பியதோடு அதான் மருத்துவம் படிச்ச பெண்ணா பார்த்து திருமணம் செஞ்சு வைத்தோம் ஆனால் போலீசு கேசுன்னு அந்த பொண்ணு மிரட்டுது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.