சி.சி.டி.வி, பயோமெட்ரிக் வருகைப்பதிவு உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியில்லை என சுட்டிக்காட்டி ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு மருத்துவ ஆணையத்தின் இளநிலை கல்வி வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து சுமார் 500 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது பற்றி சென்னையில் பேட்டியளித்த தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரிகளில் குறைகளை சரி செய்யும்படி தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அலட்சியமாக இருந்திருக்கக் கூடாது என்று பா.ம.க தலைவர் அன்புமணி கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், குறைகளை உடனடியாக சரி செய்து, இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2023-24ஆம் கல்வியாண்டில் 500 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.