சென்னையில் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு உறங்கிய போதை இளைஞரை, பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு போலீசார் எழுப்பி விட்ட நிலையில் அவரோ திடீர் டிராபிக் போலீசாக மாறி, ஆளில்லாத சாலையில் போக்குவரத்தை சரி செய்வதாக அலப்பறையில் ஈடுபட்டார்.
சென்னை புதுப்பேட்டையில் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் என்ஜின் இயக்கத்தில் இருக்க, பின் இருக்கையில் இளைஞர் ஒருவர் கால்மீது கால் போட்டு ஆழந்த உறக்கத்தில் இருந்தார்.
குளிர்சாதன வசதி கொண்ட காரில் அசைவின்றி மல்லாந்து கிடந்தவரை அங்கிருந்தவர்கள் சந்தேகித்து எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் பலனிக்காததால், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீசார், காரின் மேல்பகுதி மற்றும் பக்கவாட்டில் தட்டி சத்தம் எழுப்பிய நிலையிலும் எந்த சலனமும் இளைஞரிடம் இல்லாமல் இருந்தது. இருபுறமும் நின்றுக் கொண்டு போலீசார் காரை அசைக்க, தன்னை யாரோ தாலாட்டுகிறார்கள் என்று நினைத்துக் கொண்ட அந்த இளைஞர் எழுந்திருக்கவில்லை.
பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு எழுந்த அந்த இளைஞர், தள்ளாடியதால் மது அருந்தி உள்ளாரா என்று ப்ரீத் அனலைசரில் ஊத சொல்லியும் அவர் ஊத மறுத்து விட்டார் என கூறப்படுகிறது.
அத்தோடு, தான் குடித்து விட்டு வண்டி ஓட்டவில்லை என்பதை நான் drink and drive கிடையாது, வாகனம் ஓட்டி விட்டு குடித்துள்ளேன் என drive and drink என போலீசுக்கே புதிய விளக்கம் அளித்தார்.
ஒருவழியாக காரிலிருந்து கீழே இறங்கிய உடன், இப்போது நான் தான் டிராபிக் போலீஸ் என்று கூறிக் கொண்டு வெறிச்சோடி கிடந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது போன்று பாவனைச் செய்துக் கொண்டே, ரோந்து போலீசாரின் வாகனத்தையே அங்கிருந்து கிளப்பிச் செல்ல சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்தார்.
வேறுவழியில்லாமல் புறப்பட்டுச் சென்ற போலீசாரோ, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.