நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் காலமானதை அறிந்து நடிகர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுதேடிச்சென்று ஆறுதல் கூறினர். காலை முதல் கால் கடுக்க காவல் காத்த காவலர்களுக்கு, கைகூப்பி நன்றி தெரிவித்தார் அஜீத்குமார்.
நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 84.
பாலக்காட்டில் பிறந்த தமிழரான சுப்ரமணியம், கொல்கத்தாவில் பணிபுரிந்தபோது மோகினி என்ற சிந்தி இனப்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுப்குமார், அஜீத் குமார், அனில்குமார் என்று 3 மகன்கள். இவர்களில் மூத்தமகன் அனுப்குமார் முதலீட்டாளராக உள்ளார். இளைய மகன் அனில்குமார் ஐஐடி மெட்ராசில் பணிபுரிந்து வருகின்றார். 2 வது மகன் அஜீத்குமார், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார்.
கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் காலமானது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையை அண்ணன் தம்பிகள் மூவரும் சேர்ந்தே வெளியிட்டனர். அதில் தங்களது தந்தையை இதுநாள் வரை கவனமாக பார்த்துக்கொண்ட அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புவதாகவும், இறுதிச்சடங்குகளை தாங்கள் தனிப்பட்ட முறையில் செய்ய, ஒத்துழைக்கும் படியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர். நட்பின் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் ஆளாக நேரில் சென்று அஜீத்தின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜய், சிம்பு, ஏ.எல்.விஜய், மிர்ச்சி சிவா , பார்த்திபன் ஆகியோரும் அஜீத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்
இந்து முறைப்படி நடந்த இறுதிச்சடங்கில் தந்தையின் உடலை அஜீத்குமார் முதல் ஆளாக நின்று சுமந்து சென்றார்.
இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மாமியாரை கைத்தாங்கலாக மருமகள் ஷாலினி அழைத்து வந்தார்.
மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, தனது தாயை ஆறுதலாக அரவணைத்துக்கொண்டார் அஜீத்.
அஜீத்தின் அண்ணன் அனுப்குமார் இறுதிச்சடங்குகளை செய்த பின்னர், சுப்ரமணியம் உடல் தகனம் செய்யப்பட்டது.
மின் மயானத்தில் இருந்து வெளியே வந்த அஜீத்குமார் காலை முதலே தங்கள் வீட்டிலும் மயானத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களை கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
இறுதிச்சடங்கின்போது ஆரம்பம் முதல் அஜீத்துடன் இருந்து வில்லன் நடிகர் பெசன்ட் நகர் ரவி தேவையான பாதுகாப்பு உதவிகளை செய்து கொடுத்தார்.
என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க என்று அஜீத்திடம் செல்போனில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய நிலையில், தங்கள் ஆறுதல் ஒன்றே போதும் என்று அஜீத் கூறியதாக தகவல் வெளியான நிலையில், திரையுலகில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் தனித்து தெரிய, இதுதான் காரணம் என்கின்றனர் திரையுலகினர்.