நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க - வைர நகைகளை திருடி தனது 3 மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகவும், 95 லட்சம் ரூபாய்க்கு சொத்து வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்த பெண் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்..
நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா சென்னை போயஸ்கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் உள்ள ரஜினி வீட்டில் வசித்து வருகின்றார்.
தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த நகைகள் மாயமானது. 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், தங்க கட்டிகள், நவரத்ன நகைகள், என ஆறு வகையான விலை மதிப்புள்ள அணிகலன்களை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்தார். இந்த நகைகளின் மதிப்பு 3 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்பட்டது
அதில் கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு லாக்கரில் வைத்திருந்த நகைகளை திறந்து பார்க்கவில்லை எனவும் சிஐடி நகர், போயஸ்கார்டன், செயிண்ட் மேரிஸ் சாலை என மூன்று வீடுகளுக்கு லாக்கரை மாற்றி மாற்றி கொண்டு சென்றதாகவும் வீட்டில் பணிபுரிந்து 6 மாதத்திற்கு முன்பாக பணியில் இருந்து நின்றுவிட்ட பணியாளரான ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரில் ஐஸ்வர்யா குறிப்பிட்ட பெண்பணியாளர் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் பணபரிவர்த்தனை நடந்ததை கண்டுபிடித்த போலீசார் அவரையும் அவரது கணவர் அங்கமுத்தையும் பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. ஈஸ்வரி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வீட்டில் அனைத்து பகுதிகளுக்கு வந்து செல்ல ஐஸ்வர்யா அனுமதித்துள்ளார்.
அப்போது நடிகர் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பிரச்சனை இருந்து வந்ததை பயன் படுத்தி லாக்கர் சாவியை எடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஈஸ்வரி சிறுக சிறுக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் இருந்த நகைகளை ஒவ்வொன்றாக திருட தொடங்கி உள்ளார்.
ஈஸ்வரிக்கு மூன்று மகள்கள் என்பதால் திருடிய நகைகளை விற்று அவர்களின் திருமண செலவுக்காக நிலம் வாங்கிப்போட்ட தகவல் தெரியவந்தது. திருட்டு பணத்தில் வாங்கவில்லை என்று தெரியவேண்டும் என்பதற்காக, வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் 95லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கிய ஈஸ்வரி அந்த கடனை, திருடிய நகைகளை விற்று இரண்டே வருடத்தில் அடைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் நகைக்கடையில் 350 கிராம் தங்க நகைகளை உருக்கி விற்பனை செய்ததாக திருட்டு பணியாளர் ஈஸ்வரி கொடுத்த தகவலின் பேரில் நகைகள் மீட்கப்பட்டது.
திருட்டு நகைகளை விற்ற பணத்தில் வாங்கிய சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள 95 இலட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஈஸ்வரியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிக் கொண்ட நகைக்கடை உரிமையாளர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்களை கைப்பற்றியதோடு ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்ததாக கார் ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டுக்குள் தனுஷும், ஐஸ்வர்யாவும் சண்டைபோட்டுக் கொண்டு இருந்ததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பணியாளர் ஈஸ்வரி சத்தமில்லாமல் இந்த நகை கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.