சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண் புள்ளிங்கோக்கள் ஜாம்பி போல அரசு பேருந்துக்கு அடியில் படுத்து கொண்டும், வாகனங்களை மறித்தும் அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில் 3 பெண்கள் மது அருந்திவிட்டு சாலையில் செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பார்த்த போது இரு பெண்கள் அரசு பேருந்தை மறித்து அதற்கு அடியில் சென்று படுத்துக் கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்
பேருந்துக்கு அடியில் புகுந்த இருவரையும் பத்திரமாக வெளியே கொண்டுவர நடத்துனரும், மற்ற வாகன ஓட்டிகளும் பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர்
மற்றொரு பக்கம் பல்லி போல ஒல்லியான தேகத்துடன் காணப்பட்ட மற்றொரு பெண் புள்ளீங்கோ தன்னை ஒரு சூப்பர் உமனாக நினைத்துக் கொண்டு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி அடாவடியில் ஈடுபட்டார். பெண் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்
போதை தலைக்கேறிய நிலையில் காணப்பட்ட அந்தப்பெண்கள் 3 பேரும் போலீசாருக்கு ஒத்துழைக்காமல் ஜாம்பீஸ் போல அட்டகாசம் செய்தனர்.
அந்த குடிகார சூப்பர் உமனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த புள்ளீங்கோ பையனுக்கு , கன்னத்தில் ஒரு அறைவிட்டு விரட்டி அடித்தார் பெண் காவல் ஆய்வாளர்.
ஒரு வழியாக பேருந்துக்குள் பதுங்கி இருந்த அந்த இரு குடிகார ஜாம்பீஸையும் வெளியே கொண்டு வந்த நிலையில் அவர்கள் இருவரும், தங்கள் கையை ஆண் போலீஸ் எப்படி பிடிக்கலாம் ? என்று கேட்டு உரிமைக்குரல் எழுப்பினர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 3 பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார் அங்கு வைத்து போதையை தெளியவைத்து விசாரித்தனர். அவர்கள் 3 பேரும், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் என்றும் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு பரிமாறும் வேலைக்கு வந்ததாகவும், வேலை முடிந்த கையோடு மூக்கு முட்ட குடித்து விட்டு போதையில் சாலையில் ரகளை கச்சேரி வைத்ததும் தெரியவந்தது.
3 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து தகுந்த புத்திமதி கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதை தவறாக புரிந்து கொண்டு, போதையில் விழுந்து... சாலையில் உருண்டு... வம்பு செய்ததால் 3 பெண்களும் போலீசிடம் சிக்கி வழக்கு வாங்கி இருப்பது குறிப்பிடதக்கது.