கார் கண்ணாடிகளை நூதன முறையில் உடைத்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிய திருச்சி ராம்ஜி நகர் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளான். ஹேர் பின், ரப்பர்பேண்ட், சாக்லேட் கவர், இரும்பு குண்டு ஆகிய பொருட்களை மட்டும் வைத்து நூதன முறையில் திருடி வந்த கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னையில் பூக்கடை, பாண்டி பஜார், தியாகராய நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட சில கார்களின் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப், உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக அந்தந்த காவல் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் எங்கெங்கு பயணித்துள்ளனர் என்பதை கண்டறிந்த போலீசார், அவர்கள் பெங்களூரில் பதுங்கியிருந்ததை உறுதி செய்தனர். இதனை அடுத்து, தேனாம்பேட்டை தனிப்படை போலீசார் அங்கு சென்று சபரி என்ற முக்கிய கொள்ளையனை கைது செய்தனர். அவன், விமானம் மூலம் டெல்லி தப்பிச்செல்லும் முன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவனிடம் இருந்து 6 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சபரியை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கும்பல் மீண்டும் சென்னையில் களம் இறங்கி கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில், இதே போல் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணா நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கார் கண்ணாடிகளை நூதன முறையில் உடைத்து லேப்டாப்புகளை திருடியுள்ளனர். இவர்களை அண்ணாநகர் தனிப்படை போலீசார் பெங்களூரில் கைது செய்தனர். மேலும், அதே பாணியில் பெரிய ஆயுதம் இன்றி இந்த கும்பல் மீண்டும் கொள்ளையை அரங்கேற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பயன்படுத்தும் ஒரு ஸ்லைடு பின், சில ரப்பர் பேண்ட், சாக்லேட் கவர் மற்றும் இரும்பு குண்டு என கையடக்க பொருட்களை வைத்து கவன் போல செய்து கார் கண்ணாடியை நொடிப்பொழுதில் உடைத்து லாவகமாக திருடிவிட்டு சென்றுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
சென்னையில் கடந்த டிசம்பரில், 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியதாக கைதான சபரி வாக்குமூலம் அளித்த நிலையில், எஞ்சியவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொள்ளையடித்தவர்களுக்கு பதிலாக ராம்ஜி நகரில் இருக்கும் வேறு நபர்களை சரணடைய வைத்து வழக்கில் இருந்து தப்பும் முறையையும் கொள்ளையர்கள் கையாளும் நிலையில், இந்த வழக்கிலும் அவ்வாறு நிகழாமல் இருக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.