சென்னை தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல் அவரை கடுமையாக தாக்கி, அவரது பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயரில் மாற்ற முயன்ற சம்பவம் ராமநாதபுரம் அருகே அரங்கேறி உள்ளது..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பகைவென்றி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட பழனிச்சாமி, சென்னை தியாகராயநகரில் கட்டுமானம் , ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரிடம் மேலாளராக பணியாற்றும் விக்கிரவாண்டி வலசை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், பழனிச்சாமியிடம் 46 லட்சம் ரூபாய் கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். பணத்துக்கு பிணையாக வீட்டு பத்திரத்தை கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை பாலமுருகன் திரும்ப தராமல் இழுத்தடித்ததால், இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏர்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 12 ஆம் தேதி பாம்புவிழுந்தான் கிராமத்தில் குடியிருக்கும் ஊரக்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர் செல்வகுமார் என்பவர் பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாலமுருகன் 56 லட்சம் ரூபாய் கொடுக்க தயாராக இருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெற்று விட்டு , தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படியும் அழைத்துள்ளார்.
இதனை நம்பிய செல்வகுமாரின் வீட்டிற்கு பத்திரங்களுடன் காரில் புறப்பட்ட பழனிச்சாமி, பத்திரத்தை காரில் வைத்துவிட்டு செல்வகுமாரின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு பழனிச்சாமியை சிறைபிடித்த செல்வக்குமாரின் ஆதரவாளர்கள் கை, கால்களை கயிற்றால் கட்டி, முகத்தை மூடி, வாயில் துணியை திணித்து அடைத்து வைத்ததாக கூறப்படுகின்றது.
இரவில் வேறு ஒரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி மற்றொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டிவைத்து வைத்து துப்பாக்கி முனையில் மிரட்ட தொடங்கி உள்ளனர். பிருந்தாவனம் மண்டபம் கட்டுமானம் நடக்கின்ற இடத்தின் பத்திரம், பாலமுருகன் பெயரில் உள்ள வீட்டு பத்திரம், தெளிச்சாத்தநல்லூர் இட பத்திரம் ஆகியவற்றை எடுத்துவந்து கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி தனது கார் ஓட்டுநர் கனகராஜுக்கு போன் செய்து காரில் உள்ள பத்திரங்களை கொடுத்து விடும்படி கூறியுள்ளார். பத்திரங்களை கைப்பற்றிய கடத்தல் கும்பல் எழுதப்படாத பத்திரங்களில் கையெழுத்து மற்றும் கைரேகை வாங்கியதோடு மேற்படி பதிவு செய்த பத்திரங்களை வேறு நபருக்கு விற்பனை செய்வதற்காகவும் கையெழுத்து பெற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக பழனிச்சாமியிடம் மீதம் உள்ள சொத்து ஆவணங்களையும் பறிக்கும் நோக்கில் சொந்த ஊரான பகைவென்றி கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு கடத்தல் கும்பல் அவரை அழைத்துச் சென்றுள்ளது.
அப்போது சுதாரித்துக் கொண்ட பழனிச்சாமி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஓடிச்சென்று தன்னை கடத்தி அழைத்து வந்திருப்பதாக கூச்சலிட்டு உறவினர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஊரார் ஒன்று கூடியதால் கடத்தல் கும்பல் காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் எமனேஸ்வரம் போலீசார் உத்திரகுமார், செல்வகுமார், பாலமுருகன், நேரு முருகன், ஆனந்த் ஆகிய நான்கு பேர் மீது ஆள் கடத்தல், உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.