ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூட்டி தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தாக்கல் செய்த மனுவிற்கு, தேர்தல் ஆணையம் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையின்போது, இடைத்தேர்தலில் இரட்டை இலையை பயன்படுத்த தடை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அப்போது, கட்சி விவகாரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் என இருதரப்பும் முரண்டு பிடிப்பதால், நீதிமன்றமே தீர்வுகளை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வேட்பாளரை தேர்ந்தெடுக்க இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினரும் உள்ளடக்கிய பொதுக்குழுவை கூட்ட உத்தரவிட்ட நீதிபதிகள், கட்சியிலிருந்து ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் நீக்கப்பட்டது அந்த பொதுக்குழுவிற்கு பொருந்தாது என்றனர். மேலும், பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.