நெல்லையில் கட்டுமான அதிபரை கொலை செய்து மூட்டையாக கட்டிவைத்துக் கொண்டு, கடத்தி வைத்திருப்பதாக மிரட்டி அவரது குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய காதலி, இளைஞருடன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பேட்டை அபிஷேகப்பட்டியில் 10 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட கட்டுமான அதிபர் ஜேக்கப் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது ரகசிய காதலி தேவி, சம்சிகாபுரத்தை சேர்ந்த நடனப்பள்ளி ஆசிரியரின் மகன் பிரின்ஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தேவியின் நடத்தை சரியில்லாததை காரணம் காட்டி அவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்ட நிலையில் , சம்சிகாபுரத்தில் பரத நாட்டிய பள்ளியில் பயிற்சிக்காக சேர்ந்த தேவி அங்குள்ள மாஸ்டரையும் அவரது மகன் பிரின்ஸையும் காதல்வலையில் வீழித்தியுள்ளார். தேவியின் காதல் திருவிளையாடல்கள் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளார்.
தேவியை புதிதாக வீடு பார்த்து தங்கி இருந்த பேட்டை நரசிங்க நல்லூருக்கு வந்து செல்வதை பிரின்ஸ் வழக்கமாக்கி உள்ளான். இதற்கிடையே தேவிக்கு கட்டுமான அதிபர் ஜேக்கப் ஆனந்தராஜுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 63 வயதான அவரை தனது வலையில் விழ வைத்த தேவி அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கி சொந்தமாக வீடு கட்ட தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணி அளவில் இளம் காதலன் பிரின்ஸ் , தேவியின் வீட்டில் இருந்த போது, ஜேக்கப் ஆனந்தராஜ் அங்கு வந்துள்ளார். பிரின்ஸ் ஓடிச்சென்று சமையல் அறையில் ஒழிந்து கொண்டதாக கூறப்படுகின்றது. அபோது ஜேக்கப் ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்ல்லை என்ற நினைப்பில் காதலியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை தடுத்த தேவி தள்ளிவிட்ட போது கீழே விழுந்த ஜேக்கப்பிற்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பிரின்ஸ் , கீழே விழுந்து உயிருக்கு போராடிய ஜேக்கப் ஆனந்தராஜை கழுத்தை நெரித்துள்ளான். இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து சடலத்தை மூட்டையாக கட்டி கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு, அவரது காரை எடுத்துச்சென்று பல இடங்களில் சுற்றி உள்ளனர்.
கொலையை மறைக்கவும், பணம் பறிக்கும் திட்டத்திலும்,ஜேக்கப் ஆனந்தராஜை கடத்தி வைத்திருப்பதாக பணம் கேட்டு மிரட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தேவியின் தறி கெட்ட காதலால் ஒருவர் கொலை செய்யப்பட, மற்றொருவர் கொலையாளியாக கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.