பள்ளிக்குழந்தையின் ஷூவுக்குள் குட்டி நாகப்பம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கடலூர் செம்மண்டலம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது இரண்டு குழந்தைகளும் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் ஆயுதபூஜைக்காக வீட்டை தூய்மை செய்யும் பணியில் அசோகன் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது அவரது குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து செல்லும் ஷூவுக்குள் குட்டி பாம்பு ஒன்று மறைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாம்பு பிடிவீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தார்.
அசோகன் வீட்டிற்கு வந்த செல்லா குழந்தைகள் அணியும் அந்த ஷூவை கையில் எடுத்து பார்த்த போது, உள்ளே ஒளிந்திருந்த குட்டி நாகப் பாம்பு ஒன்று படம் எடுத்த படி சீறியது.
நாகப் பாம்பை பொறுத்தவரை முட்டையிலிருந்து வெளிவந்த சில தினங்களான பப்பு சினேக்கிற்கு கூட கொடிய விஷம் உண்டு என்பதால் குறும்படம் எடுத்தாடிய குட்டி ஸ்னேக்கை லாவகமாக கையாண்டார்.
பின்னர் வெற்று குடி நீர் பாட்டில் ஒன்றில் அந்த பப்பு சினேக்கை பக்குவமாக அடைத்து எடுத்துச்சென்றார். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்லும் நாட்களில் அவசர அவசரமாக ஷூவை காலில் அணிந்து செல்வதை வழக்கமாக செய்து வந்த நிலையில், விடுமுறை என்பதால் அதிர்ஷ்டவசமாக ஷூவை கையில் எடுக்கவில்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வீட்டில் காலணிகளை வெளியில் கண்டபடி போடாமல் மரப்பெட்டி போன்ற அமைப்பை உருவாக்கி அதற்குள் முறையாக அடுக்கி வைத்து பயன்படுத்தினால் விஷஜந்துக்கள் உள்ளே புக இயலாது. அதே நேரத்தில் எப்போதும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்களது ஷூவை நன்கு கவிழ்த்து தரையில் தட்டி பார்த்துவிட்டு அதன் பிறகு காலில் அணிந்து செல்வது நல்லது என்கிறார் பாம்பு பிடி வீரர் செல்லா.