சென்னை அண்ணா நகர் புகாரி ஓட்டலில் உடைந்த கண்ணாடித் துண்டுகளுடன் சிக்கன் பிரைடு ரைஸ் பரிமாறப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தனது உயிருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஓட்டல் நிர்வாகம் தான் பொறுப்பு என்று கண்ணாடி பீஸ் பிரைடுரைஸ் சாப்பிட்டவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த குமரன் என்பவர் தனது நண்பர்களுடன் உணவருந்த சென்றார். அவர் ஆர்டர் செய்தபடியே சிக்கன் ப்ரைடு ரைஸ் குமரனுக்கு பரிமாறப்பட்ட நிலையில், அவர் சாப்பிட்டுக் கொண்டுந்த போது வாயில் உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று சிக்கி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதனை தனியாக எடுத்து வைத்து ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். சிக்கன் பிரைடு ரைஸில் சிக்கன் பீஸ் போட்டுத்தானே தயார் செய்வார்கள், நீங்கள் என்ன கண்ணாடி பீஸ் எல்லாம் போட்டு தர்ரீங்க ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அடுத்த சில நொடிகளில் மற்றொரு கண்ணாடித் துண்டு ஒன்று உள்ளே கிடப்பதை கண்டு பிடித்த குமரன், முக்கால் பாகம் சாப்பிட்ட பிரைடு ரைஸுடன் மெல்லிய கண்ணாடித் துண்டுகள் வயிற்றுக்குள் என்றால் என்னவாகும் என்று பீதிக்குள்ளானார். இதனை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அரிசி மூட்டையில் இருந்து கண்ணாடி துண்டுகள் வந்து இருக்கும் என்று கூறி சமாளித்த வேகத்தில் அந்த உணவை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக தனது உயிருக்கோ, உடல் நலத்துகோ எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கான முழு பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார்.
கண்ணாடி பீஸ் பிரைடு ரைஸ் பரிமாறப்பட்ட சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் அளித்து நீண்ட நேரமாக அங்கு அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகின்றது. இதற்கிடையே புகாரி ஓட்டலில் சாப்பிட்ட பில், புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் அளித்துள்ள குமரனின் குற்றச்சாட்டு குறித்து புகாரி ஓட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முழுக்கோழியை சிங்கிள் பிரைடு ரைஸ்க்குள் மறைத்தனர்..!