திருச்சி திண்டுக்கல் சாலையில் , கஞ்சா போதையில் ஓட்டலுக்குள் புகுந்து ஊழியர்களை உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கி தப்பிச்சென்ற இளைஞர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி - திண்டுக்கல் சாலையில் தீரன்நகரில் உள்ள காரைக்குடி உணவகத்திற்கு வந்த 3 அரைடவுசர் ஆசாமிகள் கடைக்குள் அமர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர். இதனைக் கண்ட ஹோட்டல் ஊழியர் அந்த போதை வாலிபர்களை ஹோட்டலை விட்டு வெளியே போகும்படி கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த மூன்று வாலிபர்களும் ஹோட்டல் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போதை தலைக்கேறிய நிலையில் திடீரென ஹோட்டலில் இருந்த இரும்புக் கம்பி மற்றும் மரக்கட்டையை எடுத்து ஹோட்டல் ஊழியர்களை கடுமையாக கொலை வெறியுடன் தாக்கினர்
இதில் ஹோட்டல் கேஷியர் கருணாநிதி தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக கருணாநிதியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரத்துடன் எடமலைப்பட்டு புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் ஹோட்டல் கேஷியரை தாக்கிய ராம்ஜி நகர் கள்ளிக்குடியை சேர்ந்த முத்துகிருஷ்ணனை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜெகதீசன், அஜித் குமார் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கஞ்சா போதையில் தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களும் வெறிப்பிடித்தவர்கள் போல நடந்து கொண்ட நிலையில் காவல்துறையினர் கஞ்சா விற்பனையை இரும்புக்கரம் கொண்டு தடுக்காவிட்டால் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் தடுக்க இயலாத நிலை ஏற்படும் என்று அந்தப்பகுதி பொது மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.