டெல்லி செங்கோட்டையில் சுதந்திர நாள் உரையாற்றிய பிரதமர் மோடி, எரியாற்றலில் தற்சார்பு நிலையை அடையப் பசுமை எரியாற்றல் திட்டங்களை முன்னெடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். விண்வெளி முதல் ஆழ்கடல் வரை இளைஞர்களின் ஆராய்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் சுதந்திர நாள் உரையாற்றிய பிரதமர் மோடி, விடுதலைக்குப் பாடுபட்டவர்களுக்கும், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கும் நாடு நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகோள் விடுத்தார். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற காந்தியின் கனவை நனவாக்கக் கடந்த 8 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் முழக்கங்களுடன் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான ஜெய் அனுசந்தான் முழக்கத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
பெண்களை அவமதிப்பதை நிறுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் பேச்சும் நடத்தையும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
ஊழல், குடும்ப ஆட்சி ஆகிய இரு சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஊழலுக்கு எதிராக வலிமையுடன் போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சூரிய ஒளி மின்சாரம், ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு, மின்சார வாகனங்கள் பயன்பாடு ஆகிய திட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் எரியாற்றலில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
விண்வெளித் துறை, டிரோன்கள் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் இந்தியா விரைவாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார். தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் அறிவியல்,விண்வெளி, ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் முன்னேற வேண்டியுள்ளதால் இளைஞர்களுக்கு ஏராளம் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.