தமிழகத்துக்குக் காவிரியில் நீர்வரத்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து நேற்று மாலை ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. இன்று காலையிலும் அதே அளவு நீர்வரத்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது. ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 5 டிஎம்சியாகவும் உள்ளது. நண்பகல் நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நொடிக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. சுரங்க மின்நிலையம் வழியே 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியே 97 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய ஊர்களில் காவிரிஆற்றின் கரையோரமுள்ள முந்நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியிருந்தன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கடந்த இரு நாட்களாகக் குறைந்துள்ளதால், ஆற்றின் நீர்மட்டமும் ஓரளவு குறைந்துள்ளது.