சேலத்தில் பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் கடைக்குச் சென்ற ஒரு இளம் ஜோடி சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள புல்லட் வாகனத்தை ஓட்டிப் பார்த்துவிட்டுத் தருகிறோம் எனக் கூறி திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் டவுன் பழைய பேருந்து நிலையம் அருகே பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி பழுது நீக்கி விற்பனை செய்யும் கடைகள் 20க்கும் மேல் உள்ளன. அவற்றில் ஒரு கடைக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என ஜோடியாக 4 பேர் வந்துள்ளனர்.
அவர்களில் ஒரு ஜோடி ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ரக பைக் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். கடைக்காரர்களும் ஒரு வாகனத்தை காண்பிக்க, அதனை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அவர்களுடன் வந்த ஒரு ஜோடி அங்கு இருந்ததால் கடைக்காரர்களும் வாகனத்தை ஓட்டிப் பார்க்க இளம் ஜோடியிடம் கொடுத்துள்ளனர்.
பைக்கை எடுத்துச் சென்ற ஜோடி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறப்படும் அந்த பைக் திரும்பி வரும் என்று நீண்ட நேரம் காத்திருந்த கடை ஊழியர்கள், வண்டியை எடுத்துச் சென்ற ஜோடியுடன் வந்த மற்றொரு ஜோடியை விசாரித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் யாரென்றே தெரியாது என்றும் தங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, நாங்களும் பைக் வாங்கத் தான் வந்தோம் என்று கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த கடைக்காரர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். ஆனால் பைக் திரும்பி வருகிறதா என ஓரிரு நாள் பார்த்துவிட்டு பின்னர் வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் கூறியதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர். 2 நாட்கள் கடந்தும் பைக் வராததால், சக கடைக்காரர்களுக்கு சிசிடிவி காட்சிகளை அனுப்பிவிட்டு காத்திருக்கின்றனர்.