தெலங்கானாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அளித்த புகாரின் பேரில், 40 வருட மரத்தை வெட்டிய நபருக்கு 62,075 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்க்கை நகரமயமாகி வருகிறது. காடுகளும் இயற்கை வளங்களும் அழிந்து வருகின்றன. வறண்ட நீர் நிலைகளில், வான் உயரக் கட்டிடம் எழுப்பி, உல்லாசமாக வாழும் கூட்டம் ஒரு புறம். அழிந்து வரும் வளங்களை மீட்டு, புவிக்கு அழகு சேர்க்க அயராது உழைக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றோரு புறம் போராடி வருகின்றனர். அண்மையில் நடந்த உத்தராகண்ட் பனிப்பாறை வெடிப்பு முதல், மேலும் நடக்கவிருக்கும் பல இயற்கை பேரிடர்களுக்கு முக்கியம் காரணம் பூமி வெப்ப மயமாகுதல் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். உலக அரசியல் தலைவர்களுக்கு புவியின் நலன் மீது அக்கறை இல்லையென்றாலும், இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு எடுத்துக் காட்டாக தெலங்கானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது
ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் பகுதியில் இருந்து தெலுங்கானா வனத்துறையினரின், டோல் ப்ரீ எண்ணுக்கு அதிகாலை 4 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது . அழைப்பின் மறுபக்கம் பேசியதோ 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன். அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த சிறுவன், ஏதோ சத்தம் கேட்டு எழுந்துள்ளான். ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ரெட்டி என்பவர் வீடு கட்டுவதற்காக 40 வருடப் பழைய வேப்பமரம் ஒன்றை வெட்டி வாகனத்தில் ஏற்றியுள்ளார். சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வமுடைய அந்த சிறுவனுக்கு இது மிகுந்த வேதனையாக இருந்துள்ளது. உடனடியாக, அந்த சிறுவன், அதிகாலை நேரம் என்றும் பாராமல் தெலங்கானா வனத்துறையினருக்கு போன் செய்து மரம் வெட்டுவது பற்றி தகவல் அளித்தான்.
தெலங்கானா அரசு மரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, கு ஹரிதா ஹராம் என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளிலும் பசுமை அமைப்பை ஏற்படுத்தி , மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. தனது பள்ளியில் பசுமை அமைப்பின் உறுப்பினராக இருந்த அந்த மாணவன், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தான். வனத்துறை அதிகாரிகள் பல முறை கேட்டும் தன்னை பற்றிய மற்ற விவரங்கள் எதையும் சிறுவன் குறிப்பிடவில்லை.
புகாரை ஏற்ற தெலங்கானா வனத்துறை அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். விசாரணையில், சந்தோஷ் ரெட்டி முறையான அனுமதி வாங்காமல் மரத்தை வெட்டியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, சந்தோஷ் ரெட்டிக்கு ரூ. 62,075 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சிறு வயதிலேயே சூற்றுசூழல் மீது மாணவனுக்கு இருக்கும் ஈடுபாட்டினை கண்டு வியந்த தெலங்கானா வனத்துறையினர் ,அந்த பெயர் அறியாத மாணவனுக்கு தங்கள் பாராட்டினை தெரிவித்தனர்.