Advertisement

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

அரசாணை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதை சட்டவிரோதமாகக் கருத முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்ததை அடுத்து, 2 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததை எதிர்த்தும், திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு ஜல்லிக்கட்டு தொடர்பான அரசாணையில் மனுதாரர்கள் கூறும் ஊர்களின் பெயர் இல்லாததால் அனுமதி வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்றைய தினத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2017-ல் வெளியிடப்பட்ட ஜல்லிக்கட்டு அரசாணையை சுட்டிக்காட்டி கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரசு தரப்பில் வாதிட்டார். ஆனால் அரசு 2017-ல் 16 அரசாணைகளை வெளியிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, 2018ஆம் ஆண்டுக்கு அரசாணை வெளியிடாமலே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தியதை சட்டவிரோதமாகக் கருதமுடியும் என நீதிபதி குறிப்பிட்டார்.

ஜனவரி முதல் மே மாதம் வரையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி உள்ள நிலையில், அறிவிப்பாணை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய முடியும் எனவும் நீதிபதி கூறினார். அரசாணை பிறப்பிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். தமிழக அரசிடம் கேட்டு உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையையும் நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், சிராவயல், கண்டிப்பட்டி, அரசலூர் ஆகிய 6 ஊர்களுக்கு அனுமதி அளிக்கும் ஜனவரி 12ஆம் தேதியிட்ட அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதேபோல, ஜனவரி 14 முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் 78 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன