Advertisement

40 ஆண்டுகளாக சினிமாக்களில் ரஜினிகாந்த் பேசிய அரசியல்

1976ல் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் திரை உலகிற்குள் அடியெடுத்துவைத்தவர் நடிகர் ரஜினிகாந்த்..! 1978ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது வெளியான முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் மூலம் தனது அரசியல் ஆர்வமின்மையை அதிரடியாக வெளிக்காட்டினார் ரஜினிகாந்த்..

ஆனால் 2 ஆண்டுகள் கழித்து 1980ல் வெளியான முரட்டுக்காளை படம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ரஜினிக்கு ஜே போட இளைஞர் கூட்டம் முண்டியடித்தது… ஏராளமான ரசிகர் மன்றங்கள் உருவானது.

1981ஆம் ஆண்டில் வெளியான ராணுவ வீரனில் நக்சலைட்டுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ராணுவவீரனாக ரசிகர்களை கவர்ந்தார் ரஜினி காந்த்…

1982 ல் வெளியான தனிக்காட்டு ராஜா படத்தின் மூலம் தன்னை எம்.ஜி.ஆர் பாணியிலான சமூக அக்கறை உள்ள நாயகனாக அடையாளப்படுத்திக்கொண்டார். 1983ல் வெளியான அடுத்த வாரிசு படத்தின் தலைப்பே அரசியலில் பல சர்ச்சைகளையும் ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. 1986 ல் வெளியான ரஜினியின் மாவீரன் திரைப்படத்தில் இடபெற்ற பாடல்கள் ரஜினியின் கொள்கையை விளக்குவதாக இருந்தது.

1987ல் வெளியான சத்யா மூவீஸின் ஊர்க்காவலனில் இடம்பெற்ற இந்த பாடல் மூலம் ரஜினி தங்களுக்கு வாக்கு கொடுப்பதாகவே ரசிகர்கள் பலர் கருதினர்

அதே ஆண்டு வெளியான மனிதன் படத்தில், மறைந்த துக்ளக் ஆசிரியர் சோவுடன் இணைந்து அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினி காந்த்

ரசிகர்கள் ரஜினியை தர்மத்தின் தலைவனாக எதிர்பார்த்த நேரத்தில் 1988ல் வெளியான ராஜாதி ராஜா மூலம் தனக்கு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார் ரஜினி காந்த்

1991ஆம் ஆண்டில் வெளியான தளபதி திரைப்படத்தின் வெற்றி ரஜினிகாந்தை மக்கள் மத்தியில் தளபதியாக்கியது… 1992ல் ஆணவம் பிடித்த பெண்ணை எதிர்க்கும் மன்னன் ஆக ரசிகர்களை கவர்ந்த ரஜினிக்கு, அப்போதையை முதலமைச்சருடன் கருத்து வேறுபாடு உண்டானது. அதன் தாக்கத்தில் அண்ணாமலையில் அதிரடி அரசியல் வசனம் பேசி ஆளும் தரப்பை அதிர வைத்தார் ரஜினிகாந்த்

1993ஆம் ஆண்டில் எஜமான் படத்தில் அரசியல் கட்சியின் தலைவரை போல வேட்டி சட்டையுடன் தோன்றியதால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வந்து விடுவார் என அப்போதே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்

தொடர்ந்து வெளியான வள்ளி படத்தில் சேலை வேட்டி கேட்காதீங்க வேலை வெட்டி கேளுங்கன்னு அரசியல்வாதிகளை வம்புக்கிழுத்த ரஜினி, 1995ஆம் ஆண்டில் வெளியான பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவில் பேசிய வெடிகுண்டு கலாச்சாரம் குறித்த பேச்சு அரசியல் வட்டாரத்தை உலுக்கியது. தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக குரல் கொடுத்து 1996 தேர்தலில் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைய வழிவகுத்த ரஜினி காந்த் அப்போதும் நேரடி அரசியலுக்கு வராமல் ஒதுங்கியே இருந்தார்..!

1995ல் வெளியான முத்து படத்தில் அரசியல் கட்சி தொடங்குவது காலத்தில் கையில் இருப்பதாக கூறினார் ரஜினி…அருணாச்சலம் , படையப்பா என பட்டையை கிளப்பிய ரஜினியின் வெற்றிக்கு பாபாவில் புகைபிடிக்கும் காட்சியை சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி..!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாபா படத்தை திரையிட விடாமல் பா.ம.கவினர் தடுத்தனர். 2003 பாராளுமன்ற தேர்தலில் பா.ம.கவுக்கு எதிரான ரஜினியின் வாய்ஸ் எடுபடாமல் போனது..!

அதன்பிறகு வந்த தனது படங்களில் அரசியல் பேசுவதை சாதுர்யமாக தவிர்த்து வந்தார் ரஜினி..! ஜெயலலிதாவின் மறைவு, கலைஞரின் உடல்நலக் குறைவு…! அரசியலில் அந்த இரு ஆளுமைகளின் வெற்றிடங்கள் தனக்கு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் மீண்டும் தைரியமாக காலெடுத்து வைத்துள்ள காலா ரஜினிக்கு சினிமாவை போல அரசியலிலும் வெற்றி கிடைக்குமா ? என்ற காலத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன