2,500 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான நியமனத்திற்கு தடை

தமிழகத்தில், 2,500 உதவி சர்ஜன் எனப்படும் மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

2016, நவம்பர் 10-ம் தேதி, 144 மற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்கள் உள்ளிட்ட 1,223 உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப்பணிகள் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு 2017, ஃபிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்ற நிலையில், ஃபிப்ரவரி 28 முதல் மார்ச் 15 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், 2016-ம் ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில், 2017 ஜூலை 5 முதல் ஜூலை 18-ம் தேதிவரை 2,500 உதவி சர்ஜன் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாகவும், எவ்விதமான நடைமுறைகளும் பின்பற்றாமல் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதால் அதற்கு தடை விதிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், 2016-ம் ஆண்டு அறிவிக்கையின் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன