Advertisement
Advertisement

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு – விவசாயிகள் நடத்தி வந்த சாலை மறியல் வாபஸ்

முல்லைப் பெரியாறில் இருந்து தங்களுக்கு தண்ணீர் திறக்காமல், பி.டி.ஆர். கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், வைகை அணையில் கூடுதலாக நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மேலூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் விரிவாக்க கால்வாய் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க இருப்பதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதனைக் கண்டித்தும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரியும் காலை முதல் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழவளவு, வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

இதனிடையே தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், மேலூர் திருச்சி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படாததால் அங்கிருந்து பேரணியாகச் சென்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மணிவண்ணன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் இருபுறமும் நூற்றுக்காணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தின் காரணமாக மதுரை செல்லும் வாகனங்கள் நத்தம், கொட்டம்படி வழியாக திருப்பி விடப்பட்டன. இதனிடையே நண்பகலில் ஆலோசனையில் ஈடுபட்ட விவசாயிகள், திடீரென சாலையின் நடுவே பந்தல் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் வரும் 21 முதல் 27ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு, வைகை அணையிலிருந்து திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக 200 கன அடி அளவும், பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி அளவும் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த விவசாயிகள், நெடுஞ்சாலையில் இருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து 6 மணி நேரத்திற்குப் பிறகு திருச்சி – மதுரை சாலையில் போக்குவரத்து சீரானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன