வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவு தரக் கோரி பழனிசாமியிடமும், ஓ.பி.எஸ்சிடமும் பிரதமர் மோடி பேச்சு

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கைய நாயுடுவை ஆதரிக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரித்ததற்காக தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கைய நாயுடுவுக்கு தமது வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்ததாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசியதாக கூறப்பட்டுள்ளது.

பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும், இதனை பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!