Advertisement
Advertisement

விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு என்ற முடிவில் தேர்தல் அலுவலர் உறுதி

விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு என்ற முடிவை ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட முடியாதது உறுதியாகியுள்ளது.

நடிகர் விஷால் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நேற்று புகார் அளித்தார். தேர்தல் சட்டப்படி இன்றைக்குள் விஷால் தனது குற்றச்சாட்டு குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஆதாரத்துடன் விளக்கம் அளித்தால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ள வய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை அடுத்து இன்று பிற்பகல் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியை விஷால் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தனது வேட்பு மனுவில் தன்னை முன்மொழிந்த இருவரையும் காணவில்லை என்றார். அவர்கள் வீட்டின் முன் யாரோ காவலுக்கு நிற்பதாகவும் தெரிவித்தார்.

முதலில் நிராகரித்த வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டது ஏன் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம் கேட்டதாகவும், அதற்கு தான் மிரட்டியதால் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டதாக வேலுச்சாமி பதில் அளித்ததாகவும் விஷால் கூறியுள்ளார். தான் மிரட்டவில்லை கெஞ்சியே வேட்பு மனுவை ஏற்க வைத்தது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு நிராகரிப்பு விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட இருப்பதாகத் தெரிவித்த அவர், இடைத்தேர்தலில் போட்டியிடாமலேயே ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்மை செய்யப்போவதாகவும் கூறினார்.

இதனிடையே விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டதாக கூறப்படும் தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தேர்தல் பார்வையாளர்களை சந்தித்து தாங்கள் விஷாலை முன்மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்திடவில்லை என்று விளக்கம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன