Advertisement

விழுப்புரம், நாகை, தஞ்சை மாவட்டங்களில் பரவலாக மழை

தமிழகத்தில் இன்றுமுதல் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த வாரம் பெய்த மழை நீர் வயலில் முழுமையாக வடியாத நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சின்னசேலம் ,சங்கராபுரம், கச்சிராயப்பாளையம் ,தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கும்பகோணத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாயினர். இந்த மழை தங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று சம்பா சாகுபடிக்கு நாற்று நட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறையும் என்று தெரிவித்தார். அதே நேரம், வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன