Advertisement

வாத்து நடை தண்டனையால் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு; டான் போஸ்கோ பள்ளியில் விபரீதம்

பெரம்பூர் டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில், 5 நிமிடம் தாமதமாக வந்த 10 ஆம் வகுப்பு மாணவனை வாத்துபோல நடக்க வைத்து தண்டனை வழங்கியதால், அவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை, பெரம்பூர் திரு.வி.க குடியிருப்பை சேர்ந்த முரளி என்பவரது மகன் நரேந்திரன். பிருந்தா திரையரங்கம் அருகே உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் நரேந்திரன் புதன்கிழமை வழக்கம் போல பள்ளிகூடத்துக்கு சென்றார். அங்கு நடந்த இறைவணக்க கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வகுப்புக்கு செல்லும் போது நரேந்திரன் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவரை இரு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தும், பலனின்றி உயிரிழந்து விட்டதாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற பெற்றோர், சிரித்த முகத்தோடு பள்ளிக்கு சென்ற தனது மகன், சடலமாக கிடப்பதை கண்டு கண்ணீர் வடித்தனர். காவல்துறையினரும் மாணவன் நரேந்திரன் இயற்கையாக மயங்கி விழுந்து இறந்ததாக உறுதியளித்ததால், பிணக்கூறாய்வுக்கு பின்னர் அவரது சடலத்தை பெற்றோர் பெற்றுச்சென்றனர்.

இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து திரும்பிய நரேந்திரனின் நண்பர்கள் தெரிவித்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. காலையில் 5 நிமிடம் தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர் நரேந்திரனை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் என்பவர் கண்டித்துள்ளார். மேலும் தாமதமாக வந்ததற்கு தண்டனையாக நரேந்திரன் உள்பட 6 மாணவர்களை வாத்து போல மண்டியிட்டு பள்ளியை 3 முறை சுற்றிவர கட்டாயப்படுத்தி உள்ளார். 3 மாணவர்கள் பள்ளியை சுற்றிவந்து வகுப்பிற்குள் சென்றுவிட மாணவர் நரேந்திரன் உள்பட 3 பேர் மண்டியிட்டு சுற்றிவர முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர். இருவர் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் காப்பாற்றப்பட நரேந்திரன் மட்டும் பள்ளி வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகம் இதனை மறைத்து மாணவன் இயற்கையாக மயங்கி விழுந்து இறந்ததாக பொய்யான தகவலை தெரிவித்து காவல்துறையையும், மாணவனின் பெற்றோரையும் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. உறவினர்கள் காவல்துறையின் வார்த்தையை நம்பி சடலத்தை வாங்கிச்சென்ற நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நரேந்திரனின் உறவினர்கள் மற்றும் அந்த பள்ளியில் படிக்கின்ற சக மாணவர்களின் பெற்றோர் திருவிக நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது,

காவல் துறையினரோ, பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக, மாணவன் நரேஷ் இயற்கையாக உயிரிழந்ததாகவே சமாளித்து வந்தனர். உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கொந்தளித்தனர்.

5 நிமிடம் தாமதமாக வருவது குற்றம் என்றால், அதற்கு தண்டனை வழங்கி குழந்தைகளை மன, உடல் ரீதியாக துன்புறுத்துவது பெருங்குற்றம் என்று கல்வியாளர்கள் பலர் சுட்டிகாட்டி வரும் நிலையில் மாணவர்களை துன்புருத்தும் இத்தகைய பள்ளிகூடங்கள் மீது பள்ளிக்கல்வித்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன