Advertisement
Advertisement

வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

வழக்கறிஞர்கள் எனக் கூறிக் கொண்டு கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிமீறும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை கவனிப்பதில் பழைய மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு இடையில் பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழைய நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், கறுப்பு வெள்ளை உடையுடன் வழக்கறிஞர்கள் எனக் கூறிக் கொண்டு சிலர், கல்லூரி வளாகத்திற்குள் நிற்கும் புகைப்படங்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த புகைப்படங்களை பார்த்த நீதிபதி, சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில், நீதித்துறை மீதும், காவல் துறை மீதும் நம்பிக்கையில்லாமல், கறுப்பு வெள்ளை உடையணிந்து வழக்கறிஞர்கள் எனக் கூறிக் கொள்ளும் கூலிப்படையினரை, அணுகுவதையே இந்த வழக்கு காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

மேலும், ஆந்திராவில் 200 மற்றும் கர்நாடகாவில் 125 சட்டக் கல்லூரிகள் செயல்படுவதாகவும், அங்கு வகுப்புகளுக்கு செல்லாமல், பட்டம் பெறுவோர், இதுபோன்ற கட்ட பஞ்சாயத்துக்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். போலி ஆவணங்கள் மூலம் வழக்கறிஞர்களாக பதிவு நடந்துள்ளதா என கண்டறியும்படி, தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 4 ஆயிரம் கோப்புகள் மாயமாகியுள்ளதாக தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் என கூறிக் கொண்டு கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இதுசம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கில் ஒரு உத்தரவு பிறப்பிக்கும் வரை, கல்லூரி நிர்வாகத்தை தற்போது கவனிக்கும் பழைய நிர்வாகிகளே தொடரலாம் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

One Response to வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

  1. மரிய ஜான் டேவிட் சொல்கிறார்:

    கட்ட பஞ்சாயத்து நடத்தும் வக்கீல்களுக்கு தண்டனை சரி ஆனால்,காவல் துறை எந்த வழக்குகளையும் காவல் நிலையங்களில் பதிவு செய்யாமலும் நீதிமன்றங்களுக்கு கொண்டுவராமலும் காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து பேசும் காவல் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன