Advertisement
Advertisement

வருமான வரி சோதனையைக் கண்டித்து தினகரன் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி – 100க்கும் மேற்பட்டோர் கைது

ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை போயஸ் கார்டனுக்கு வருமான வரி அதிகாரிகள் வந்த தகவலை அறிந்ததும், தினகரன் ஆதரவாளர்கள் பலர் அங்கு கூடத் தொடங்கினர். வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

போயஸ் தோட்டத்திற்குள் செல்ல முயன்ற தினகரன் ஆதரவாளர் கலைராஜன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்தப்படும் சோதனை தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்

அப்போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டு, சற்று நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

தினகரன் ஆதரவாளர்கள் வருகையைத் தொடர்ந்து, போயஸ் தோட்டத்திற்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டன. சென்னை நகர கூடுதல் ஆணையர்கள் ஜெயராம், சாரங்கன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, போயஸ் தோட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, போயஸ் கார்டனில் நடைபெற்ற சோதனை ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த சசிகலா குடும்பத்தினர் செய்த சதி என்று குற்றம் சாட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன