Advertisement

உச்சநீதிமன்ற நிர்வாகம் முறைப்படி நடைபெறுவதை தலைமை நீதிபதி உறுதிப்படுத்த மறுக்கிறார் – உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மற்றும் அமர்வுகளை தேர்வு செய்யும்போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மரபுகளையும் வழக்காறுகளையும் பின்பற்றுவதில்லை என நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நீதிபதிகள் நான்கு பேரும் கூட்டாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த சில உத்தரவுகள் ஒட்டு மொத்த நீதிபரிபாலன முறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். உயர்நீதிமன்றங்களின் சுய அதிகாரத்தில் தலையிடும் வகையிலும் உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என நீதிபதிகள் நான்கு பேரும் புகார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலக செயல்பாடுகளிலும் சில தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். சென்னை, கொல்கத்தா, மும்பை உயர்நீதிமன்றங்கள் தோன்றிய காலம் முதல் நீதித்துறையில் குறிப்பிட்ட சில மரபுகள் மற்றும் வழக்காறுகள் பின்பற்றப்பட்டு வருவதாக நீதிபதிகள் நால்வரும் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று உயர்நீதிமன்றங்கள் பின்பற்றிய மற்றும் பின்பற்றும் மரபுகள், வழக்காறுகளை சார்ந்தே உச்சநீதிமன்றம் செயல்படத் தொடங்கியதாக நீதிபதிகள் நால்வரும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி தலைமை நீதிபதியாக இருக்கக்கூடியவர் தான் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை தேர்வு செய்யக்கூடியவர் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள் நால்வரும், வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளையும், அமர்வுகளையும் தேர்வு செய்யக்கூடிய தலைமை நீதிபதி தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர். வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளையும், அமர்வுகளையும் தேர்வு செய்வதால் தலைமை நீதிபதி சக நீதிபதிகளை விட உயர்வானவர் என்பதற்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை என்று நீதிபதிகள் நால்வரும் கூறியுள்ளனர். வழக்குகளுக்கான நீதிபதிகள் மற்றும் அமர்வுகளை தலைமை நீதிபதி தேர்வு செய்ய, சிறப்புமிக்க வழிமுறை காலம் காலமாக உச்சநீதிமன்றத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் உச்சநீதிமன்றத்தில் மரபுப்படியான வழிமுறையில் நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் நீதிபதிகள் நால்வரும் கூறியுள்ளனர். தலைமை நீதிபதி தனது சுயவிருப்பத்தின் பேரிலும், எந்த வித சரியான காரணமும் இன்றியும் வழக்குகளை விசாரிக்கும் அமர்வை மாற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் நால்வரும் கேட்டுக் கொண்டுள்ளனர். தலைமை நீதிபதி தனது சுயவிருப்பத்தின் பேரில் வழக்குகளை விசாரிக்கும் அமர்வை மாற்றியது குறித்து விரிவாக பேசினால் உச்சநீதிமன்றம் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இருந்தாலும் விசாரணை அமர்வுகளை மாற்றும் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் நற்பெயருக்கு ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்பதால், கடிதம் எழுதி பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு கோருவதாக நீதிபதிகள் நால்வரும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன