Advertisement

லண்டன் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்

லண்டனில் 7பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.  லண்டனில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு, வெண்ணிற வேன் ஒன்று லண்டன் பாலத்தின் மீது தாறுமாறாக ஓடி பயணிகளை சாய்த்தது.

அருகில் இருந்த பரோ சந்தையில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், கடைவீதியில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை கத்தியால் குத்திக் கொன்றனர். இதனால் பெரும் பதற்ற நிலை உருவானது. ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர்.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்தனர். லண்டன் பாலம் மூடி சீல் வைக்கப்பட்டது. அருகில் இருந்த டியூப் ரயில் நிலையம் பேருந்து நிலையம் போன்றவையும் மூடப்பட்டன.

இச்சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் களம் இறங்கிய லண்டன் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தீவிரவாதிகளின் வேனை அடையாளம் கண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் போலீசார் 50 குண்டுகளை சரமாரியாக சுட்டதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் உடலில் குண்டுகளைக் கட்டியிருப்பதாக மிரட்டிய போதும் அவை போலியான குண்டு ஆடைகள் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.

பொதுமக்களில் ஒருவர் போலீசாரால் தவறுதலாக சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த சண்டையில் 4 போலீசாரும் காயம் அடைந்தனர். தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட 48 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இச்சம்பவத்தை அடுத்து லண்டனை சுற்றி போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தீவிரவாதம் தோற்கும் அன்பு வெல்லும் என்ற வாசகங்களுடன் உயிரிழந்தோருக்கு மலர் அஞ்சலி செலுத்த பலர் பரோ முக்கிய வீதியில் திரண்டிருந்தனர்.

இதனிடையே, இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பிரிட்டன் மீது தொடுக்கப்பட்ட மூன்றாவது தீவிரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன