Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மறுப்பதற்கில்லை – கடலோர காவல்படை காமண்டர் ராமராவ்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மறுப்பதற்கில்லை என மண்டபம் கடலோர காவல்படை காமண்டர் ராமராவ் தெரிவித்திருக்கிறார். கடலோர காவல்படையின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது, ரப்பர் குண்டுகளை பயன்படுத்துவது வாடிக்கை என்றும் கூறியிருக்கிறார்.

ராமேஸ்வரத்தில் இருந்து படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற 6 மீனவர்கள், கடந்த 13ஆம் தேதி பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படையினரால் துப்பாக்கிச்சூட்டிற்கும், இரும்பு கம்பிகளால் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர். இதில், இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். மீனவர்கள், துப்பாக்கி குண்டுடன் சென்று அளித்த புகாரின் அடிப்படையில், மண்டபம் கடற்கரை காவல்நிலையத்தில், கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து, சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், குண்டு எங்கிருந்து வந்தது என தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் உலக மீன்வள தினத்தில் பங்கேற்ற மண்டபம் கடலோர காவல்படையின் காமண்டர் ராமராவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சுடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மறுப்பதற்கில்லை என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன