Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப் பதிவு

மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்திய கடலோர காவல்படை கப்பலில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 3 கடல் மைல் தொலைவில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படையினர் சுட்டதில் 2 மீனவர்கள் காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குண்டடிபட்டு கையில் ரத்தம் சொட்டும் நிலையில் தன்னை இந்தி, ஆங்கிலம் பேச வற்புறுத்தியதோடு, கடலோர காவல்படையினர் அடித்து துன்புறுத்தியதாக மீனவர் அந்தோணி பிச்சை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், காயம்பட்ட மீனவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட இந்திய கடலோர காவல்படை கப்பலில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம், மீனவர்கள் சுடப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

 

இதனிடையே, மீனவர்கள் மீது கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்திய “ஜெகோவா ஜிரே” ((Jehovah Jireh)) என்ற மீன்பிடிப் படகை, பாக் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் இருந்த கடலோரக் காவல்படை கப்பல், நவம்பர் 13ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு விசாரணைக்கு உட்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடலோர காவல்படை கப்பல் நெருங்கியவுடன், அந்த மீன்பிடிப் படகு, இரட்டை மடி வலையை விட்டுவிட்டு தப்பி ஓடமுயன்றதாகவும், தொடர்ச்சியாக எச்சரித்தும் நிற்காததோடு தப்பி ஓடும்போது கப்பல் மீது மோதிவிட்டுச் சென்றதாகவும் பாதுகாப்புத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 50 நிமிடங்கள் துரத்தி படகு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், படகில் இருந்தவர்களிடம் தப்பி ஓடியது ஏன் என விசாரணை நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு சோதனையின்போது நிற்காமல் சென்றதற்காக எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி கடலோரக் காவல்படை கப்பல், எந்த மீனவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், ரப்பர் புல்லட்டுகளை இந்திய கடலோர காவல்படை பயன்படுத்துவதில்லை என்றும் விளக்கம் அளிப்பட்டுள்ளது. மீன்பிடி படகில் இருந்தவர்கள் குற்றம்சாட்டுவது போல, துப்பாக்கியால் சுட்டோ அல்லது வேறு எந்த வகையிலுமோ கடலோர காவல்படையினர் காயம் ஏற்படுத்தவில்லை என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை மடி வலையை பயன்படுத்தியதற்காகவும், நிற்காமல் சென்றதற்காகவும் கடலோர காவல் படையினர் எச்சரித்ததால் கவனத்தை திசைதிருப்புவதற்காக மீனவர்கள் இந்த குற்றச்சாட்டை கூறியிருக்கலாம் எனவும் பாதுகாப்புத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன