மெர்சல் முன்பதிவால் போராட்டத்தை விலக்கி கொள்ள தயாரிப்பாளர் முடிவு

தமிழ் திரை படங்களை இனி வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்த போராட்டத்தை இன்று விலக்கிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கதலைவர் விஷால் அறிவித்த இந்த போராட்டம் அவரது மணி மண்டப பேச்சால் ஆட்டம் கண்டது. இந்த நிலையில் முதல் நாள் பேச்சுவார்த்தைக்கு வந்த விஷால் உள்ளிட்ட திரை உலகினரை 2 மணி நேரம் காக்கவைத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கெத்துக்காட்டினர். 25 சதவீதம் திரையரங்க கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்துள்ள நிலையில் மக்களின் நலன் கருதி வசூலிக்கப்படும் 10 சதவீதம் கேளிக்கை வரியை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

2 வது நாள் மதியம் 12 மணிக்கு தலைமை செயலகம் வந்த விஷால் உள்ளிட்டவர்களுக்கு போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். சுமார் 6 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட பின்னர் அவர்களது கோரிக்கை ஏற்புடையது அல்ல என்பதை கூறி திருப்பி அனுப்பி விட்டதால் மிகுந்த சோகத்துடன் சென்றார் விஷால் ஒரு பக்கம் படங்களை வெளியிடப்போவதில்லை என்று அரசிடம் பேசிக்கொண்டே மறுபக்கம் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் புதிய படங்களான மெர்சல், கொடிவீரன் உள்ளிட்ட படங்களை தீபாவளிக்கு வெளியிடும் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்துவருவதை அறிந்த அமைச்சர்கள் 3 வது நாள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை.

இதற்கிடையே தீபாவளி வெளியீடாக வரும் விஜய்யின் மெர்சல் படத்திற்கு பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியது. முதல் நாள் டிக்கெட்டுக்குள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் போராட்டத்தை வாபஸ் வாங்கும் நிலைக்கு தயாரிப்பாளர் சங்கம் தள்ளப்பட்டது. இந்த நிலையில் கேளிக்கை வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படாது என்றும், வேண்டுகோளுக்கிணங்க குறைந்த பட்ச சலுகை இன்று அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஏற்கனவே அறிவித்தபடி விஜய்யின் மெர்சல் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. விஷாலின் துடுக்கான பேச்சால் நீண்ட காத்திருப்புக்கு ஆளான திரை உலகினர் விஜய்யின் மெர்சல் முன்பதிவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன