Advertisement

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

அரசுப் போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த 27 பரிந்துரைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளதாகவும், அவற்றை செயல்படுத்தினாலே பேருந்து கட்டணத்தை உயர்த்த தேவையில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சட்டப்பேரவை எதிக்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, போக்குவரத்து கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக, திமுக தயாரித்த 27 பரிந்துரைகளின் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திமுக கொடுத்த அறிக்கையில், அரசின் கொள்கையால் போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்ட நட்டத்தையும், முதலீடுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், பேருந்துகளுக்கு கூடு கட்டும் பணியை அரசுப் போக்குவரத்துக் கழகங்களே மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அதிகமாக இருப்பதால், அவற்றை ரத்து செய்துவிட்டு, 10 சதவீத ஜி.எஸ்.டி. வரி மட்டுமே விதிக்க வேண்டும் திமுக அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுக கொடுத்த 27 பரிந்துரைகளை செயல்படுத்தினாலே, பேருந்துக் கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டியதில்லை என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை திறந்துவைக்க குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மறுத்தது ஏன் என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், ஊழல் குற்றவாளி என்பதால் ஜெயலலிதாவின் படத்தை திறக்க பிரதமர், ஆளுநர் உள்ளிட்டோர் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன