மின் மீட்டர் கருவி கொள்முதலுக்கு உயர்நீதிமன்றம் தடை

மின்சார பயன்பாட்டை அளவிடும் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம், தடை விதித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 28 லட்சத்து 99 ஆயிரம் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது.

இதில் 13 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 7 நிறுவனங்களின் டெண்டர்கள் திறக்கப்பட்டன. இதில் அதிக விலை கோரப்பட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கேப்பிட்டல் பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தங்களது டெண்டரில் ஒரு மின் மீட்டருக்கு 452 ரூபாய் விலை குறிப்பிட்டு இருந்ததாகவும், ஆனால் தங்களுக்கு ஒப்பந்தம் தராமல், 495 ரூபாய், 482 ரூபாய் என அதிக விலை குறிப்பிட்ட 6 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த டெண்டர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த டெண்டர் நடவடிக்கையால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு இழப்பு ஏற்படும் என்றும், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கேப்பிட்டல் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனம் தனது மனுவில் கூறியுள்ளது.

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மனு தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன