Advertisement

மாமுல் தர மறுத்த டீக்கடை உரிமையாளரின் மகன் மீது காவலர் ஒருவர் கொதிக்கும் பால் வீசிய கொடூரம்

சென்னை புழல் அருகே மாமுல் தர மறுத்த டீக்கடை உரிமையாளரின் மகன் மீது காவலர் ஒருவர் கொதிக்கும் பால் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புழல் காவல் நிலையம் அருகே சக்தி என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருபவர் சந்திரன். இவரது மகன் விக்னேஷ் கல்லூரியில் பயின்று வந்தாலும் தந்தைக்கு உதவியாக அவ்வப்போது கடையில் பணிபுரிவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தந்தை இல்லாத நேரத்தில் தேநீர் கடையைப் பார்த்துக்கொண்ட விக்னேஷிடம் சென்னை புழல் காவல்நிலையத்தில் பணிபுரிந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் கண்ணன் நண்பர்களுடன் சென்று மாமுல் கேட்டுள்ளார்.

பணம் தர மறுத்த கல்லூரி மாணவர் விக்னேஷ் உடன் தகராறில் ஈடுபட்ட காவலர் கண்ணன், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து விக்னேஷ் மீது கொதிக்கும் பாலை எடுத்து ஊற்றியுள்ளார். அலறித் துடித்த கல்லுரி மாணவன் விக்னேஷை அக்கம்பக்கதினர் ஆம்பூலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து விக்னேஷின் தந்தை சந்திரன், புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது அதனை போலீசார் வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் வழக்கறிஞர் மூலம் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரித்த பொன்னேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, பாதிக்கபட்ட மாணவனை நேராக மருத்துவமனைக்குச் சென்று பார்த்து அவரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் வழக்கைப் பதிவு செய்யுமாறு புழல் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். காவலர் ஒருவரே மனிதாபிமானமற்ற அராஜக செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன