Advertisement

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை

மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் உறவினர்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 187 இடங்களில் நடைபெற்ற சோதனையில், 7 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் சுமார் 1300 கோடி ரூபாய்க்கான முதலீடு ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு 9 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தனர். இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரையும் அழைத்து வந்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சோதனையை தொடங்கினர். ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச்செயல் அதிகாரி விவேக், இளவரசியின் மற்றொரு மகள் ஷகிலா ஆகியோரும் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வந்த வேதா இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் முன்னிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறை, சசிகலாவின் அறை உள்ளிட்ட 4 அறைகளில் சோதனை நடைபெற்றது.

ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை, அதிகாலை 2 மணியளவில் முடிவுக்கு வந்தது. 4 பைகளில் ஆவணங்கள், லேப்டாப், 2 பென்டிரைவ் ஆகியவற்றுடன் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளவரசியின் மகனும், ஜெயா டி.வியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக், ஜெயலலிதாவின் அறைகளை அதிகாரிகள் சோதனையிட தாங்கள் அனுமதிக்கவில்லை என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன