மருத்துவப் படிப்பில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு விவகாரம்

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மருத்துவப் படிப்பில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 85 சதவிகிதம் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மாதம் 22 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

 

இதை எதிர்த்து சுகாதாரத்துறை சார்பில், உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலன் கருதியே அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும் மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உள்ஒதுக்கீடு கூடாது என்றோ, அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றோ தனிநீதிபதி தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் மேல்முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதால், மருத்துவப் படிப்பில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை உறுதி செய்ய வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சிபிஎஸ்இ மாணவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசின் மேல்முறையீட்டை விசாரிக்கும்போது, தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என மனுவில் சிபிஎஸ்இ மாணவர்கள் கோரியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன