மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு என்ற ரீதியில் செயல்படுகிறது – ஸ்டாலின்

மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு என்ற ரீதியில் மக்கள் படும் வேதனைகளை வேடிக்கைப் பார்ப்பது கொடுமையானது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வானளாவிய அதிகாரம் உண்டு என்ற நினைப்பில் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி இருப்பதாகக் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட தற்போது கச்சா எண்ணெயின் விலை 52 %க்கும் அதிகமாகக் குறைந்துள்ள நிலையில், மாறாக பெட்ரோல் டீசல் விலையை 50 %க்கும் மேல் உயர்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சுமைதாங்கி பாறாங்கல்லை மக்கள் மீது வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இந்த பெட்ரோல் விலை உயர்வில் வரி கமிஷன் மட்டுமே 70 %க்கு மேல் அடங்கியிருக்கிறது என்பதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எந்தளவிற்கு குறைந்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துவதாகவும், ஆனால், இது மக்களை சென்றடையவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ அமைதியாக மக்கள் படும் வேதனைகளை வேடிக்கைப் பார்ப்பது கொடுமை என ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுளளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!