Advertisement
Advertisement

மதுரையில் தொழில் அதிபர் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது

மதுரையில் கார் ஓட்டுனருக்கு மயக்க ஊசி செலுத்தி, தொழிலதிபரின் இரு மகள்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகைசெல்வத்தின் மகள்கள் அனுஸ்ரீ மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் அவர்களை கார் ஓட்டுனர் பாண்டியன் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில் மர்மநபர்கள் சிலர் காரை மறித்து குழந்தைகளை கடத்தி சென்றனர்.

காரை மறித்த கும்பல் தனக்கு மயக்க ஊசி செலுத்தியதால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என போலீசாரிடம் ஓட்டுனர் பாண்டியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தைகளை விடுக்க கடத்தல்காரர்கள் 1 கோடி ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது. போலீசார் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், குழந்தைகளை கார்த்திகை செல்வம் வீட்டு வாசலிலேயே மர்மகும்பல் விட்டுச் சென்றது. குழந்தைகளை மீட்பதற்கு 50 லட்சம் ரூபாய் பணம் கடத்தல்காரர்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆராய்ந்த போலீசார் நெல்லை பகுதியில் கடத்தல் கும்பல் நடமாடுவதையறிந்து அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் கடத்தலில் தொடர்புடையதாக கருதப்படும் வள்ளிக்கண்ணன் என்பவனைக் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட குழந்தைகள் இருவரும் தங்களை அடைத்து வைத்திருந்ததாக மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை அடையாளம் காட்டினர். இதையடுத்து இன்று அதிகாலையில் வீட்டை உடைத்து அதிரடியாகச் புகுந்த போலீசார் , தீவிர சோதனை நடத்தினர். பின்னர் அந்த வீட்டில் குடியிருந்த பெண் ஜீவா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தனக்கு மயக்க மருந்து செலுத்தியதாக ஓட்டுனர் பாண்டியன் கூறியிருந்த நிலையில், அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் அவருக்கு மயக்கமருந்து செலுத்தப்படவில்லை என முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணையில் ஓட்டுனர் பாண்டியன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து வருவதால், போலீசாரின் சந்தேகப் பார்வை பாண்டியனின் பக்கம் திரும்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன