Advertisement
Advertisement

மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால் பயிரிடும் பரப்பு குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அடையாளமான மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால், அதனைப் பயிரிடும் பரப்பு குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த வயல்வெளி எங்கும் படர்ந்திருக்கும் பயிர்களின் நிறம் தான் பசுமை… அவற்றின் வேர்களில் விளைந்திருப்பவை அனைத்தும் மஞ்சள்… ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த மஞ்சள் சாகுபடி, நடப்பு ஆண்டு பெருமளவு சுருங்கி விட்டது. மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியும், விலை கிடைக்காததால் ஏற்பட்ட தளர்ச்சியுமே இதற்குக் காரணம் என்கிறார்கள் விவசாயிகள்.

மற்ற பொருள்களைப் போல் அல்லாது மஞ்சளைப் பத்து ஆண்டுகள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் என்கிறார்கள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள். ஆந்திர அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மஞ்சள் சாகுபடியும், விவசாயிகளும் காப்பாற்றப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசும் அதே போல, விளையும் மஞ்சளை நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய முன்வந்தால், விவிசாயிகளின் வேதனை தீரும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் குவிண்டால் 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மஞ்சளின் விலை தற்போது வெறும் 7 ஆயிரம் ரூபாயாக சரிந்துவிட்டதே, சாகுபடிப் பரப்பு குறையக் காரணம் என்பதையும் அவர்கள் விளக்குகின்றனர்.

மஞ்சள் சாகுபடியில் இரண்டாவது இடத்தை வகிக்கும் தமிழகம், அதை உற்பத்தி செய்பவர்களுக்கு ஊக்கமளித்தால் மட்டுமே முதலிடத்தை நோக்கி முன்னேறும் என்பதை கவனத்தில் கொண்டு, அரசு ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் ஈரோடு மாவட்ட விவசாயிகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன