Advertisement
Advertisement

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவான விமர்சனம் – ராகுல் அறிவுறுத்தியதால் மன்னிப்பு கேட்டார் மணிசங்கர் ஐயர்

பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில், ராகுல் காந்தி அறிவுறுத்தியதை அடுத்து காங்கிரசின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் மன்னிப்புக் கோரினார்.

முகலாயர் ஆட்சியை ஒப்பிட்டு கூறிய கருத்தால் சர்ச்சையில் சிக்கிய மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி குறித்த பேச்சால் மீண்டும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். மோடி தரம் தாழ்ந்த மனிதர் என்று பொருள் படும் வகையில் “நீச் ஆத்மி” என மணிசங்கர் அய்யர் கூறிய கருத்துக்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் தம்மை தாழ்ந்தவர் என விமர்சிப்பது குறித்து கவலைப்படவில்லை என்றும், மக்களுக்காக தாம் ஆற்றும் பணி உயர்ந்தது என்றும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி பதிலடி கொடுத்தார்.

இதனிடையே, நீச் ஆத்மி பேச்சு சர்ச்சை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அண்மைக் காலமாக பாஜகவினரும், பிரதமர் மோடியும், காங்கிரசை ஐந்தாம் தர மொழியில் மிக மோசமாக விமர்சித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில், காங்கிரசுக்கென்று ஒரு பாரம்பரியமும், பண்பாடும் இருப்பதால் மணிசங்கர் அய்யரின் பேச்சை தாம் ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். மணிசங்கர் அய்யர் அவரது கருத்துக்காக மன்னிப்புக் கோருவார் என்று தாமும், காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்ப்பதாக ராகுல் காந்தி அதில் தெரிவித்திருந்தார். இதன் எதிரொலியாக தமது பேச்சுக்காக மன்னிப்புக் கோரிய மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு அவரது மொழியிலேயே பதிலளிக்க நேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன