பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.

நாட்டின் 14-வது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணிக்கு நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 62-லும், அந்தந்த மாநில சட்டப்பேரவை வளாகங்களிலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு பத்து லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு வாக்கின் மதிப்பு 708 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வாக்கின் மதிப்பு அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையைப் பொருத்து மாறுபடும்.

20ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படவுள்ளது. தற்போதையை தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.

இரு அணிகளும் சேர்த்து அ.தி.மு.கவின் வாக்கு மதிப்பு 5.39 சதவீதம் ஆகும். ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் வாக்கு மதிப்பு 2.99 சதவீதம் என்றும் தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் வாக்கு மதிப்பு 2 சதவீதமும் இருக்கிறது.

மேலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வாக்கு மதிப்பு 1.91 சதவீதம் என்றும் ஆந்திராவின் எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வாக்கு மதிப்பு 1.53 சதவீதமும் உள்ளது.

பா.ஜ.க கூட்டணியில் இல்லாத இந்த கட்சிகள் ராம் நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளன. இதன் மூலம் பா.ஜ.க வேட்பாளர் சுமார் 13.82 விழுக்காடு மதிப்பிலான வாக்குகளை கூடுதலாக பெற உள்ளார்.

இந்த கட்சிகள் தவிர பா.ஜ.க, சிவசேனா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகயின் வாக்கு மதிப்பு சுமார் 49 விழுக்காடு வரை ராம்நாத் கோவிந்துக்கு உறுதியாக கிடைக்கும். இதன் மூலம் சுமார் 63 விழுக்காடு மதிப்பிலான வாக்குகளை பெற்று ராம் நாத் கோவிந்த் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!